கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் அதிகம் வாசித்து வரும் புத்தகங்களில், உலகளவில் நன்கு அறியப்பட்ட சிறந்த தமிழ் இலக்கியக் கதைசொல்லியும் எழுத்தாளருமான ஐயா கே. பாலமுருகன் அவர்கள் எழுதிய நூல்கள் ஆகும். அவரின் கைவண்ணத்தில் உருவான ஏழாவது சிறுவர் நாவலான பெரிய காது சிறுவன்.
பெரிய காது சிறுவன் நாவலை வாசிக்க ஆரம்பித்தபோது, நான் ஒரு கதை
படிக்கவில்லை ஒரு புதுவிதமான உலகத்தில்
காலடி வைத்தது போல உணர்ந்தேன். இந்தக் கதை முழுவதும் குமரன் என்ற சிறுவனின்
பார்வையின் வழியாகவே நகர்கிறது. அவனுடைய வெளிநாட்டு கனவுகள், அவனது உள்ளத்திலுள்ள
ஆர்வம், மற்றும் ஒவ்வொரு
விஷயத்தையும் ஆச்சரியமாகப் பார்க்கும் விதமாக,இவை அனைத்தும் கதைக்கு உயிர் கொடுக்கின்றன.
குமரனுடன் பயணிக்கும் நண்பன் சிவா கதைக்கு சிறந்த துணையாக
இருக்கிறான். அவனுடைய நகைச்சுவையும் இயல்பும் கதையை இன்னும் சுவாரஸ்யமாக
மாற்றுகின்றன. சாதாரணமானதாகத் தொடங்கும் விமானப் பயணம், அவர்கள் சந்திக்கும்
பெரிய காது சிறுவன் என்ற மர்மமான பாத்திரத்தின் மூலம் முற்றிலும் வெவ்வேறு
திசைக்குச் சென்று விடுகிறது. அந்தச் சிறுவன் எந்த உலகத்தைச் சேர்ந்தவன். அவனின் வாழ்க்கை எப்படி
இருக்கும் என்ற கேள்விகள்? வாசகர்களின் மனதில் நிறைய சிந்தனைகளை உண்டாக்குகின்றன.
மனிதர்களுக்குப்
புலப்படாத ஒரு உலகம், மேகங்களுக்கு அப்பால் இருக்கும் மர்ம சக்திகள், ஒளியால் உருவான உருவங்கள்
போன்ற கற்பனை அம்சங்கள் இந்த நாவலை ஒரு சாதாரண சாகசக் கதையிலிருந்து ஒரு உயர்ந்த
கற்பனைப் பயணமாக மாற்றுகின்றன. இது குழந்தைகளுக்கான கற்பனை கதையாக இருந்தாலும், அதில் ஒரு ஆழமான கருத்து
ஒளிந்திருக்கிறது என்று நான் உணர்ந்தேன்.
இந்த நாவலின் மொழி மிகவும் எளிமையாகவும், அதே நேரத்தில் கற்பனை நிறைந்ததாகவும் உள்ளது. விமானம், மேகங்கள், வானம், ஒளி, தெரியாத உலகம் போன்ற காட்சிகள் வாசிக்கும் போது கண்முன்னே தோன்றும் அளவுக்கு
விவரிக்கப்பட்டுள்ளன. அதுதான் இந்நாவலின் மிகப் பெரிய வெற்றி என்று நான்
நினைக்கிறேன்.
எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால், இந்த நாவல் சிறுவர்கள் மட்டும் படிக்க வேண்டிய ஒன்றல்ல. பெரியவர்கள்
படித்தாலும், அவர்கள் குழந்தை மனதை மீண்டும் ஒருமுறை அனுபவிக்கக்கூடிய ஒரு வாய்ப்பை இது
தருகிறது. கற்பனை மட்டும் இல்லாமல், அதில் மறைந்துள்ள உணர்ச்சிகளும் நண்பத்துவமும் இதை இன்னும் ஆழமாக்குகின்றன.
மொத்தமாகச் சொல்ல வேண்டும் என்றால், பெரிய காது சிறுவன் என்பது
குழந்தைகளுக்கான ஒரு சாதாரண சாகசக் கதை அல்ல. அது கற்பனையையும், அறிவியலையும், உணர்ச்சியையும் இணைத்த ஒரு
அர்த்தமுள்ள நாவல். சிறுவர் இலக்கியத்தில் இதற்கு ஒரு முக்கிய இடம் நிச்சயமாக
உரியது என்று நான் நம்புகிறேன். என்னை அக்கதை உலகிற்கு அழைத்துச் சென்றதற்காக ஐயாவிற்கு என்
மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து இதுபோல் பல நூல்கள் எழுத என் வாழ்த்துக்கள் ஐயா.
தீவிர வாசகி,
ஷர்மிளி

